கொழும்பு, பேர வாவி சுத்தப்படுத்தலை ஆரம்பித்து, தாங்கும் தளங்களைக் கொண்ட தாவரங்களுடன் கூடிய ஆயிரம் “மிதக்கும் சதுப்பு நிலத் தாவரங்களை” வாவியின் மத்தியில் வைக்கும் நிகழ்வு நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. முறையற்ற நகரமயமாக்கல், கொழும்பு நகரில் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை முறையாகச் சீரமைக்காமை காரணமாக, பேர வாவி மாசடைந்துள்ளது. அதன் நீரை சுத்திகரிக்கும் நோக்கத்தில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ.டி சொய்சா அவர்களின் வழிகாட்டலில் மிதக்கும் சதுப்பு நிலத்திட்டம் பரீட்சிக்கப்பட்டது.
PVC குழாய்கள், மூங்கில்கள் மற்றும் நுரை மெத்தைகளை மிதக்கும் தளமாகப் பயன்படுத்தி, கெனாஸ், செவந்தரா மற்றும் ஹெலிகோனியா போன்ற நீர்வாழ்த் தாவரங்களின் மூலம் நீரை சுத்திகரிப்பதற்கான பரிசோதனை வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளதாக சூழலியலாளர் ரனோஷி சிறிபால சுட்டிக்காட்டினார். மிதக்கும் சதுப்பு நிலங்களில் உள்ள தாவரங்களின் மூலம் நீரில் உள்ள மேலதிகமான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படும். அதன் மூலம் நீரில் உள்ள பாசிகளின் அளவு குறைந்து நீர் சுத்திகரிக்கப்படுதல், துர்நாற்றம் நீங்குதல் மேலும் நீரைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு வாழ்விடத்தை வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலை பேணப்படுகிறது. நீர் மேற்பரப்பை அழகுபடுத்துவது இதன் மற்றுமொரு நன்மையாகும்.
ஈக்கள் மற்றும் நுளம்புகளின் தொல்லையால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மறைமுகமான நன்மையை இதன் மூலம் எதிர்பார்ப்பதோடு, குறித்த நீர் நிலைகளில் மீன்களின் அடர்த்தியை அதிகரிப்பது போன்ற பல நன்மைகளை மிகக் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள முடியும் என காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.ஆர்.டபிள்யூ.டி. சொய்சா சுட்டிக்காட்டினார். இராஜாங்க அமைச்சர் மொஹான் பி.டி.சில்வா, கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீர, திட்டப் பணிப்பாளர் கலாநிதி என்.எஸ். விஜேரத்ன ஆகியோருடன் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.