இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாங்கள் வெளிநாடு செல்ல உள்ளதாக சில பொறியியலாளர்கள் இலங்கை மின்சார சபைக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபையினைச் சேர்ந்த 100 பொறியியலாளர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தொழில்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இலவச கல்வியின் மூலம் பொறியியலாளர்களாக உருவாகிய தாம் நாட்டுக்கு சேவையாற்ற கனவு கண்ட போதிலும், கடந்த காலங்களில் நாட்டுக்காக நேர்மையான சேவையை வழங்க முடியவில்லை என சில பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் பல நாடுகளில் பொறியியலாளர்களுக்கு நல்ல கேள்வி நிலவி வருவதாகவும், தமது பிள்ளைகளினதும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக் கொள்வதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.