மின்சார திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன. 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தில், 10 மெகாவாட்டிற்கும் அதிக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் போது விலைமனு கோரப்பட வேண்டும் என எதிர்கட்சி முன்வைத்த கோரிக்கை, குழுநிலை விவாதத்தின் போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் அளிக்கப்பட்டமையால், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

இந்நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் போது, எவ்வித திருத்தங்களும் இன்றி நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார். இந்த சட்டமூலம் தொடர்பில் மூன்று தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், இதன்போது பெரும்பான்மை வாக்குகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மேலும் சில தரப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பாரியளவிலான மின் உற்பத்தி திட்டங்களுக்கான அனுமதி, போட்டித்தன்மையுடன் கூடிய விலைமனு கோரல் நடைமுறையின்றி வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவுள்ளதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் காரணமாக மின்சக்தி சட்டத்தின் திருத்தம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மின்சார பொறியியலாளர்கள் பணி பகிஷ்கரிப்பொன்றையும் அறிவித்திருந்தனர். எவ்வாறாயினும், சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் நிறைவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குழுநிலை சந்தர்ப்பத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சட்டமூலத்திற்கான திருத்தங்களை முன்வைத்தார். இதன் பிரகாரம், எதிர்க்கட்சியினர் முன்வைத்த திருத்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியின் திருத்தம் 58 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதன்போது, திருத்தத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் கிடைத்தன. தமது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அது தொடர்பிலான சரத்து மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, சட்டமூலத்தின் குறித்த சரத்திற்கு ஆதரவாக 116 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 46 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன. இதற்கமைய, இலங்கை மின்சக்தி திருத்த சட்டமூலம் திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

பூநகரியிலும் மன்னாரிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் போட்டித்தன்மையுடன் கூடிய விலைமனு கோரல் நடைமுறையின்றி இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறைந்தபட்ச செலவீனங்கள் தொடர்பிலான கொள்கையை மீறும் வகையில், இந்த திட்டங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டதால், பல்வேறு சிக்கல்கள் உருவாவதாக அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.

source from newsfirst

Spread the love