மீண்டும் கோவிட் தொற்று அதிகரிப்பு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தல்

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாதது கடுமையான ஆபத்தை காட்டுவதாக தொற்றுநோயியல் துறையின் இயக்குநர், சிறப்பு வைத்தியர் சமிதா ஜிங்கே தெரிவித்தார்.


கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியை இரண்டு டோஸ் மட்டுமே பெற்றவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகள் அரசு சுகாதாரக் சேமிப்பகங்களில் கையிருப்பில் இருக்கிறது. மேலும், பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதால், பூஸ்டர் தடுப்பூசியின் உரிய அளவை விரைவில் பெறுமாறு வைத்தியர் சமிதா ஜிங்கே பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் உரிய தடுப்பூசிகளைப் பெறுவதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் நேற்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான 131 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் பதிவான கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 665,379 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love