பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி தொழிலாளர் கட்சித் தலைவர் லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 4-ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் ஜனாதிபதி தேர்தல் கடந்த 2-ஆம் திகதி நடை பெற்றது. இதில், வலதுசாரி தலைவரான ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ, இடதுசாரி தொழிலாளர் கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா உள்பட 11 போட் போட்டியிட்டனர்.
இதில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், பொல்சொனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனர். பிரேஸில் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவர்கள் இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடுவர். அதன்படி, இரண்டாவது சுற்று தேர்தல் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டதில், வெற்றிக்கு தேவையான 50 சதவிகிதத்தை லூலா பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதிவான வாக்குகளில் 98 சதவீதம் எண்ணப்பட்ட நிலையில், லூலா 50.8 சத வீத வாக்குகளும், பொல்சொனாரோ 49.2 சதவிகித வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மூன்றாவது முறையாக இடதுசாரி கட்சியின் தலைவர் லூலா டி சில்வா ஜனாதிபதியாவது உறுதியாகியுள்ளது. இவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.