எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனி,ஞாயிறு,திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 மீனவர்களையும் அவர்களது 10 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்யக்கோரி இன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரும் 31ம் தேதி மீனவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ள நிலையில் மீனவர்களை விடுதலை செய்யாத பட்சத்தில் வரும் 1ஆம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்துள்ளனர்.
இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை தொடரும் அதே நேரத்தில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை அரசுடமையாக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசை கண்டிக்கிறோம். தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைது நடவடிக்கை தொடரும், படகுகள் அரசுடமையாக்கபடும் என தெரிவித்ததற்கு வன்மையான கண்டிக்கத்தை பதிவு தெரிவித்துள்ளனர்.