முகமாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, விடுதலைப்புலிகள் பயன்படுத்திய 5 சீருடைகளுடன் ஒரு தொகுதி எலும்புக்கூடும் மீட்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் துப்புரவுப்பணியில் ஈடுபட்டிருந்த போது எலும்புக்கூடும் ஒரு துப்பாக்கியும் இனங்காணப்பட்ட நிலையில், துப்புரவுப்பணி நிறுத்தப்பட்டு பளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த விடயம் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நேற்று அகழ்வுப்பணி நடைபெற்றது.
கிளிநொச்சி நீதிவான், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் முன்னிலையில் காலை 8 மணியளவில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது 5 சீருடைகள், ஒரு தொகுதி எலும்புக்கூடு, வெடிக்காத கைக்குண்டுகள், பற்றரிகள், காலணிகள், விடுதலைப்புலிகள் கழுத்தில் அணியும் குப்பி, தகடு, வெடிக்காத வெடிபொருள்கள். துப்பாக்கி என்பன மீட்கப்பட்டன. அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் ஒரு பகுதியில் மாத்திரமே நேற்று அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மற்றொரு நாளில் மிகுதி இடங்களில் அகழ்வாராய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.! மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களின் அடிப்படையில், அவை புலிகளின் பெண் உறுப்பினர்கள் பயன்படுத்துபவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தகட்டின் இலக்கம் ‘ஞா 0429’, குருதி வகை ‘பி பிளஸ்’ என அடையாளம் காணப்பட்டுள்ளது.