முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணம்(24.3.22) : பொருளாதாரத்தில் பங்களிக்க துபாய்க்கு அழைப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (24) அரசுமுறை பயணமாக துபாய் செல்லவுள்ளார். 

கடந்த வருடம் அதாவது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. அக்கண்காட்சியானது இம் மாதம், அதாவது மார்ச் 31 வரை தொடரவுள்ளது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், துபாயின் இக் கண்காட்சியில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை துவக்கிவைக்கவும்,  தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(24) துபாய் செல்கிறார். 

முதல்வரின் துபாய் பயணம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் கண்காட்சியில் மார்ச் 25 அன்று தமிழ்நாடு அரங்கை திறந்து வைப்பார் என அறிக்கப்பட்டுள்ளது. 

துபாயின் இந்த கண்காட்சி அரங்கில் கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, புடைவை, தமிழ் வளர்ச்சி, தகவல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் என முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் காட்சிப்படங்கள் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் உதய சந்திரன், உமாநாத் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்ட சில அதிகாரிகளும் அவருடன் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தி.மு.க. எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே துபாய்க்கு சென்றுள்ளார்.

இந்த கண்காட்சியில் சுமார் 192 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கு பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கு அமைக்கபடுவதன் மூலம், பல உலக முதலீட்டாளர்கள் தமிழக தொழில்துறை பற்றியும் இங்குள்ள தனித்துவமான பல அம்சங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும். 

தொழில் வளர்ச்சியில் எப்போதுமே தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், நடைபெற்று வரும் தொழில்களை விரிவாக்கம் செய்யவும் அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக புதிய கொள்கைகளை உருவாக்குவதோடு, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதையும் தமிழக அரசு சீராக செய்து வருகிறது.

மேலும், வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்பு கவனத்தை தமிழக அரசு கொண்டுள்ளது. அதற்கு வசதியாக சாலை, மனிதவளம், மின்சாரம், தொழிலிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மேலும், புதிய தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளையும் அரசு வகுத்தளித்து வருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நேரடியாக அமெரிக்கா, லண்டன், துபாய் ஆகிய இடங்களுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் துபாய் தவிர அபுதாபிக்கும் செல்லவுள்ளார். மேலும், இரு இடங்களிலும், தொழிதுறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்களையும் முதல்வர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கபடுகின்றது. முதல்வரின் இந்த பயணம் தமிழகத்துக்கு அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கும் என நம்பப்படுகின்றது. 

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் முதன் முதலாகச் செல்லும் வெளிநாட்டு பயணம் இதுதான். சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது. சென்னையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலமாக துபாய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்படுகிறார். 4 நாட்கள் அங்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு 28-ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

Spread the love