முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் வித்துடல் வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் வித்துடல் புனிதர் பட்டத்திற்காக சிற்றாலயம் ஒன்றுக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திலேயே இவரது வித்துடலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாப்பரசருக்கான நன்றித் திருப்பலியை பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் ஒப்புக்கொடுத்தார்.
உலகளாவிய ரீதியிலிருந்து வருகை தந்த கர்தினால்கள், ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் துறவிகள் என பலரும் இந்த இறுதி ஆராதனையில் கலந்துகொண்டிருந்தனர். இதில் சுமார் 50,000 பொதுமக்கள் கலந்துகொண்டதாக ரோம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் பாப்பரசரின் சொந்த நாடாகிய ஜெர்மனியிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் வருகை தந்த அரசியல் பிரமுகர்களும் பெல்ஜியத்தின் மன்னரும் மகாராணியும் கலந்துகொண்டிருந்தனர்.
இறுதி ஆராதனைகளின் போது சிஸ்டைன் சிற்றாலயத்தின் பாடகர் குழாத்தினர் இலத்தீன் பாடல்களைப் பாடினர். இறுதி ஆராதனைகளைத் தொடர்ந்து பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் வித்துடலுக்கு, பாப்பரசர் பிரான்ஸிஸ் இறுதி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து, புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் பீடப்பகுதிக்குள் வித்துடல் கொண்டு செல்லப்பட்டதும், செந்திரையால் அப்பகுதி மறைக்கப்பட்டது. பாப்பரசரும், முன்னாள் பாப்பரசரும் வத்திக்கானில் அருகருகே வாழ்ந்துவந்த உன்னதமான தருணங்கள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் மரணத்துடன் நிறைவிற்கு வந்துள்ளது. பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது பெனடிக்டின் வித்துடலுக்கு கடந்த சில தினங்களாக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.