குளிர்காலத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி. முள்ளங்கி, தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை முள்ளங்கியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முள்ளங்கியின் நன்மைகளைப் பெற, முள்ளங்கியை எப்படி எல்லாம் சாப்பிடலாம், எப்படி சாப்பிடக்கூடாது என்று இங்கே பார்க்கலாம்.
முள்ளங்கியில் இருக்கும் ஊட்டச்சத்துகள் :
முள்ளங்கி வைட்டமின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கேல்சியம் சத்து நிறைந்தது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மற்ற காய்கறிகளில் அதிகம் காணப்படாத இயற்கையான நைட்ரேட்கள் முள்ளங்கியில் உள்ளன. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அல்லது குளுக்கோஸ் அதிகமாக உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முள்ளங்கி உதவுகிறது. முள்ளங்கி பல நிறங்களில் கிடைக்கிறது. பரவலாக, வெள்ளை நிறத்தில் முள்ளங்கி அதிகமாக விளைகிறது. சிவப்பு நிறத்தில் இருக்கும் முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கியை விட ஆன்டி-ஆக்சிடன்ட் சத்து அதிகம்.
முள்ளங்கியை எப்போது சாப்பிடலாம் :
முள்ளங்கி நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆனாலும், அமிலத்தன்மை கொண்ட காய்களில் ஒன்று. எனவே, நீங்கள் வெறும் வயிற்றில் முள்ளங்கி சாப்பிடுவது வயிறு உப்பசம், வாயுத் தொந்தரவு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். அதே போல, இரவு நேரத்தில், தூங்குவதற்கு முன் முள்ளங்கி சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானம் ஆகத் தாமதமாகும். எனவே, முள்ளங்கியை, கீரை வகைகள் போல மதிய நேரத்தில் சாப்பிடுவது தான் சிறந்தது. நீங்கள் மதிய உணவின் போது சாப்பிட்டால், இரவு நேரத்துக்குள் முள்ளங்கி செரிமானம் ஆகி விடும்.
முள்ளங்கி மற்றும் கருப்பு உப்பு :
அதே போல, சிலருக்கு முள்ளங்கி எப்படி சாப்பிட்டாலும் வாயு அல்லது வயிறு உப்பசம் ஏற்படுவது போலத் தோன்றும். அவ்வாறு இருந்தால், முள்ளங்கியை சமைக்கும் போது, சாதாரண உப்பு அல்லது கல்லுப்புக்கு பதிலாக, கருப்பு உப்பு சேர்த்து சமைக்கலாம்.
முள்ளங்கி பரோட்டா :
முள்ளங்கி பரோட்டா என்பது வட நாட்டில் பிரபலமான பரோட்டா அல்லது ரொட்டி வகைகளில் ஒன்றாகும். தற்போதும் தமிழ்நாட்டிலும் பிரபலமாகி வரும் முள்ளங்கி பரோட்டாவை நீங்கள் செய்யும் போது செலரி அல்லது வெள்ளரிக்காயை கொஞ்சமாக சேர்த்து செய்தால், வயிறு உப்பசம் ஏற்படாது. அது மட்டுமின்றி, வெள்ளரிக்காய் மற்றும் செலரி இரண்டுமே நீர்ச்சத்து நிறைந்த காய் வகைகளாகும். இவற்றை முள்ளங்கியுடன் சேர்ப்பது செரிமானத்தை எளிதாக்கும். அது மட்டுமின்றி, முள்ளங்கி பரோட்டா செய்யும்போது, கொஞ்சம் ஓமம் சேர்ப்பதும் வாயு ஏற்படாமல் பாதுகாக்கும்.
முள்ளங்கியை தயிருடன் சேர்த்து சாப்பிடலாம் :
முள்ளங்கியை சாலடுகளில் சேர்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. அவ்வாறு சேர்க்கும் போது, உடன் தயிரையும் சேர்த்து சாப்பிடுங்கள். பச்சை முள்ளங்கியை சாப்பிட்டால், சிலருக்கு அரிப்பு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். இதனை தவிர்க்க தயிரில் முள்ளங்கி சேர்த்து சாப்பிடலாம்.