யாழ் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட தமிழக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று மாலை தனியார் விடுதியில் யாழ்.மாவட்ட மீனவ பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் போது, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் சம்மேளன உபதலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம், நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர் ப. லீலியான் குருஸ், யாழ் மாவட்ட கடற்றோழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளன பொருளாளர் சிவஞானராசா மகேஷ், காரைநகர் அம்பாள் கடற்றொழிலாளர் சங்க தலைவர் கந்தசாமி இராஜச்சந்திரன், செயலாளர் திருநாவுக்கரசு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீனவ பிரதிநிதிகள், தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இழுவை மடி தொழில்களை முற்றாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இது குறித்து தான் இந்தியாவுக்கு சென்று கடற்றொழில் வளத்துறை அமைச்சருடன் கதைத்து நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருவதாக தமக்கு வாக்குறுதி அளித்தார்.
இழுவைமடி இந்திய படகுகளுக்கு எதிராக, எம்மால் நெடுந்தீவு பிரதேசத்தில் செய்யப்பட்ட 934 பொலிஸ் முறைப்பாடுகளை ஆவணமாகவும் காட்டியுள்ளோம். கோடிக்கணக்கில் நமக்கு இந்திய மீனவர்களால் நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளோம். – என்றனர்.