ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே தீர்மானமிக்க சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது அரசாங்கம் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் சில இந்த சந்திப்பில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியுடனான இந்தக் கலந்துரையாடலில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி பல்வேறு கட்சிகளை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியுள்ள போதும், இதுவரையில் கட்சிகளுக்கிடையே இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இவ்வாறான நிலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் வரையில் பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்தை பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு அந்தக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.