ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு திடமானது, மற்றும் நிலையானது என்று வலியுறுத்திய சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் மிகவும் பரந்து பட்டவை என்று தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் ஓர்முறை வலியுறுத்திய சீனா, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென்ற அழைப்பினை விடுத்துள்ளது. மோதல் குறித்த பீஜிங்கின் நிலைப்பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வாங் யீ மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்தார்.
உக்ரைன் நிலைமைக்கான காரணங்கள் சிக்கலானவை உடனடியாக தீர்க்க வல்லன அல்ல, என்றும் இவை யாவும் ஒரே இரவில் நடந்தவையல்ல, என்றும் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பொறுமையும் பகுத்தறிவும் தேவை, எனவும் மற்றும் முரண்பாடுகளை தீவிரப்படுத்துவதல்ல பிரச்சனைக்கான முடிவு என்றும் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தை மூலம் அமைதியான வழிகளில் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றவர், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்து பாதுகாக்கவும் வாங் யீ அழைப்பு விடுத்தார். சம்பந்தப்பட்ட தரப்பினரின் நியாயமான பாதுகாப்புப் பற்றிய கவலைகளுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நாடுகளினதும், மற்றும் இப்பிராந்தியத்தின் நீண்ட கால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மனதில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.