ரஷ்ய-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும் என ஐநா தலைவர் அண்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்பும் போலவே மோதி வருகின்றன. நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது கடந்த நாட்களின் செய்தி, இதனிடையே உக்ரைன் மீது தாக்குதல் நடத்த எந்தவித திட்டமும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது இப்படி இருக்கையில் ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் அண்டோனியோ கட்டர்ஸ் முனீச் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் ரஷ்யா சார்பாக யாரும் கலந்து கொள்ளாத நிலையில் ரஷ்ய-உக்ரைன் எல்லை போர் மிகவும் ஆபத்தானது என்று கருத்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ரஷ்ய உக்ரைன் போர் துவங்கினால் இது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு பேரழிவுகளையும் அவை சந்திக்க நேரிடும் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.