‘மேற்குலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவுள்ளன. எனவே அணு ஆயுதத் தடுப்புக் குழுவினரே, தயாராக இருங்கள்’ என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய அணு ஆயுதப்பலம் உள்ள நாடாக ரஷ்யா இருப்பதால், புடினின் உத்தரவு உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவின் அழைப்புக்கு அமைவாக பேச்சு நடத்தத்தயார் என்று உக்ரைன் நேற்று மாலை அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்து நேற்றுடன் 4 நாள்கள் கடந்துள்ளன. இந்த தாக்குதலால் ரஷ்யா மீது பல தரப்புக்களும் தடைகளை விதித்து வருகின்றன. ஜேர்மனி ஒரு படிமேலே சென்று போர் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஆயுத உதவிகள் செய்வதில்லை என்ற தனது கோட்பாட்டில் இருந்து விலகி, சட்டத்தைத் திருத்தி உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவை மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனையடுத்து நேற்று மாலை தொலைக்காட்சியில் உரையாற்றிய புடின், மேற்குலக நாடுகள் ரஷ்யாவை விரோதிகளாகக் கருதுகின்றன. பொருளாதார ரீதியாக அதிகளவான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை சட்டவிரோதமானவை. நேட்டோ நாடுகளும் நம் நாட்டுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. அதனால், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென நான் உத்தரவிடுகிறேன் – என்று கூறினார். இதற்கு ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் அழுத்தமாக ‘சரி ‘என்றார். இந்த உத்தரவும், இசைவும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் கடத்தியுள்ளது.
ரஷ்யாவுடனான அமைதி பேச்சுக்கு தயார் என்று உக்ரைன் நேற்று மாலை உறுதி செய்துள்ளது. பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசென்கோவுடனான தொலைபேசி உரையாடலின் போது, உக்ரேனிய தூதுக்குழு ரஷ்யத் தூதுக்குழுவை உக்ரேனிய – பெலாரஸ் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் முன் நிபந்தனையின்றி சந்திக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார்.
கார்கீவ் நகரத்தை தமது முழு கட்டுப்பாட்டில் மீட்டெடுத்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கார்கீவ் மாகாணத்தின் ஆளுநர் ஓலே சினெகுபோவ் இதனை அறிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனின் பிராந்தியத்தலைநகரான கார்கிவ். அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரம், அதற்குள் ரஷ்யப்படைகள் நேற்றுமுன்தினம் புகுந்தன. எனினும், இரவோடு இரவாக நடந்த கடும் சண்டைக்குப் பிறகு மீண்டும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இதுவரை நடந்த சண்டையில் சுமார் 4 ஆயிரத்து 300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சரியான எண்ணிக்கை தெளிவுபடுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் உக்ரேனியப்படைகள் சுமார் 146 டாங்கிகள், 27 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகொப்டர்களை அழித்ததாகவும் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் கூறினார்.