லிட்ரோ எரிவாயு விநியோகம் ஆரம்பம்

3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த நிலையில் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமை முதல் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு பின்னர் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடப்பட்டதுடன் நேற்றும் இன்றும் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ காஸ் நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

3,740 மெற்றிக்தொன் எரிவாயு கொண்ட மற்றுமொரு கப்பல் நேற்று நாட்டை வந்தடையவிருந்தது. எரிவாயு இருப்புக்களை ஏற்றிச் செல்லும் பல கப்பல்கள் எதிர்காலத்தில் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் திகதி அறிவிக்கப்படும் வரை வரிசையில் நிற்க வேண்டாம் என வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை லிட்ரோ காஸ் நிறுவனம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 4,910 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். அத்துடன் 2.3 கிலோ சிலிண்டர் 914 ரூபாவுக்கும், 5 கிலோ சிலிண்டர் 1,971 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. அதிக விலை கொடுத்து சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும் லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தேவையற்ற பதுக்கல்களைத் தடுக்கும் வகையில் எரிவாயு கொள்வனவு செய்யும் போதுமே மாதத்திற்கான மின்கட்டண பட்டியலை சமர்ப்பிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் எரிவாயு கிடைக்கும் என்பது லிட்ரோ காஸ் இணையதளம் மூலம் தெரியப்படுத்தப்படும் எனவும் எரிவாயு விநியோகத்திற்கு இலங்கை காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை உதவி வழங்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Spread the love