வடகொரியாவில் காட்டுத்தீ போல் பரவிவரும் கொரோனாத் தொற்றால் இதுவரை 15 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் வடகொரியாவில் முதன் முறையாக கொரோனாவின் திரிபான ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து தொற்றுப்பரவலை தடுக்கும் முகமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் வடகொரியாவில் கொரோனாவுக்கு 15 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியா, உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா போன்றவை தடுப்பூசிகள், முகக்கவசங்கள் மற்றும் சோதனைக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அனுப்பி உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ள நிலையில் அவற்றை வடகொரியா நிராகரித்துள்ளது. இந்தப் பாதிப்பு வடகொரியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதேவேளை வடகொரியாவில் சிகிச்சைக்குத் தேவையான உட்கட்டமைப்புகள் இல்லாத மருத்துவமனைகள், தீவிர சிகிச்சைப்பிரிவுகள் இன்மை, போதிய கொரோனா வைரஸ் சிகிச்சை மருந்து வகைகள் இல்லாமை, கொரோனாவை சோதிக்கும் வெகுஜன சோதனை முறைகள் இல்லாமை ஆகியவை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.