வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்படுமா ? – பாதுகாப்பு செயலரிடமிருந்து திட்டவட்டமான பதில் இல்லை

வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவ்வாறு மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவது குறித்த எதிர்பார்ப்போ அல்லது வேலைத்திட்டமோ அரசாங்கத்திடம் இல்லை எனத்தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்ற வேளையில் ஒரு சிலர் அதற்கான முதலீடுகளுக்கு இலங்கைக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் எமக்கு சாதகமாக உள்ளவரை தெரிவுசெய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விளங்கப்படுத்தக்கூடாது எனவும் கூறினார்.

கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள் என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடகமையத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போது, வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார்.


இலங்கையுடன் ஏதேனும் சர்வதேச உடன்படிக்கைகள் செய்துகொள்ளும் வேளையில் அந்த உடன்படிக்கை மூலமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து கவனம் செலுத்துகின்றோம். இலங்கைக்கு சோபா, அக்ஸ்சா உடன்படிக்கைகள் கொண்டுவரப்பட்ட வேளையில் கூட, நாம் ஓய்வுபெற்ற அதிகாரியாக இருந்தும் அதற்கு எதிராக செயற்பட்டோம். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற விடயத்தை எடுத்துக்கூறினோம். அதனால் தான் குறித்த உடன்படிக்கைகள் செயற்பாட்டிற்கு வராதுபோனது. இப்போதும் அரசாங்கம் கைச்சாத்திடும் சர்வதேச உடன்படிக்கைகள் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கின்ற பட்சத்தில் அவற்றை நாம் சுட்டிக்காட்டுவோம். ஆனால் இன்னமும் அவ்வாறான நிலைமையொன்று ஏற்படவில்லை . இந்த உடன்படிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் அதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த எமது ஜனாதிபதி அனுமதிக்கமாட்டார். மேலும் வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவ்வாறு மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவது குறித்த எதிர்பார்ப்போ அல்லது வேலைத்திட்டமோ அரசாங்கத்திடம் இல்லை .
எவ்வாறாயினும் மறுபக்கத்தில் எமது நாட்டிற்கு முதலீடுகள் அவசியம். அதற்கமைய சூரிய வலுசக்தியை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் குறித்த பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உருவாக்கமுடியும், அதற்கான முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்ற வேளையில் ஒரு சிலர் அதற்கான முதலீடுகளுக்கு இலங்கைக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் எமக்கு சாதகமான உள்ளவரை தெரிவு செய்யவேண்டும். அவ்வாறு தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் அர்த்தப்படுத்தக்கூடாது என்றார்.

Spread the love