பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தால் குடும்பத்தை பராமரிக்க முடியாததன் காரணமாக வடக்கு மாகாணத்தில் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் வழங்கிய புள்ளிவிபரத் தரவுகளின்படி 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் மட்டும் 246 சிறுவர்கள் வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடும் நிதி நெருக்கடியால் குழந்தைகளைப் பராமரிக்க முடியாத நிலையில் குடும்பத்தினரே முன்வந்து சிறுவர்களை இந்தச் சிறுவர் இல்லங்களில் அனுமதித்து வருகின்றனர். வடக்கில் உள்ள சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்கு பொருளாதார நெருக்கடியே நேரடி மற்றும் மறைமுக காரணியாக உள்ளது என வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் இராஜேந்திரம் குருப்ரன் ‘தி மோர்னிங்’ கிற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கம் எதிர் கொள்ளும் நிதி சவால்கள் காரணமாக வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு இல்லங்களில் அனுமதிக்கப்படும் சிறுவர்களை பராமரிக்க சிறுவர் இல்லங்களிடம் போதுமான நிதி இல்லை எனவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக தாய்மார்கள் பலர் வெளி நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின் றனர். குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, சிறுவர் இல்லங்க ளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார். பெற்றோர்கள் வேலை இழக்கும் போது, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர் என இராஜேந்திரம் குருபரன் கூறினார்.
தேசிய மாற்று பராமரிப்புக் கொள்கையின் கீழ் குழந்தைகளை அவர்களது குடும்பங்களால் பராமரிக்க முடியாதபோது அவர்களுக்கு ஆதரவளித்து வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் பராமரிக்கிறது. இக்கொள்கை சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை மற்றும் இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனினும் சிறுவர் இல்லங்களின் அனுமதிக்கப்படும் சிறுவர்களை மீண்டும் குடும்பங்களுடன் இணைப்பதே பராமரிப்பு இல்லங்களின் இறுதித்தேர்வாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஏனெனில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் உணர்வு ரீதியான அன்பு, அரவணைப்பு பராமரிப்பு இல்லங்களில் கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.
கருவூலத்தின் மூலம் வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துக்கு மாகாண நிதியில் இருந்து ஒதுக்கீடு பொதுவாக வழங்கப்படும். ஆனால் திடீர் பொருளாதார நெருக்கடி இந்த நடைமுறையை பாதித்து, நிதி கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் மாகாண நிதியைப் பயன்படுத்துகிறோம் என்று அவர் மேலும் கூறினார். இந்த நிதியானது குழந்தைகளை அவர்களது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்போதைய புள்ளிவிபரத் தரவுகளின்படி வடக்கில் பதிவு செய்யப்பட்ட 37 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் 1,529 சிறுவர்கள் உள்ளனர். இவர்களில் 689 சிறுவர்கள் பெற்றாரை இழந்தவர்களாகையால் பாதுகாவலர்களால் பராமரிக்கப்படுகின்றனர் எனத் தெரியவருகிறது.