வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்திற்கு நீதிக்கோரியும், சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த போராட்டத்திற்கு தமது தரப்பும் ஆதரவு வழங்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மல்லாவி, உடையார்கட்டு, மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளில் உள்ள வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஏனைய வர்த்தக சங்கங்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளன.
இந்தநிலையில், முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் கவனயீப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம், குறித்த நிர்வாக முடக்கல் போராட்டமானது மலையக மக்களின் நடைபயணத்திற்கு இடையூறாக அமையக் கூடாதென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராசா கோரிக்கை விடுத்துள்ளார்.