வணிக மற்றும் அரச பயநர்களுக்கு ருவிற்றரில் கட்டணம் வசூலிக்கப்படும் முறைமை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சாதாரண பயநர்கள் தொடர்ந்தும் ருவிற்றரை இலவசமாக பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அண்மையில் ருவிற்றர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். ருவிற்றர் நிறுவனத்தை வாங்குவதற்கே அவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் அண்மையில் வெளியிட்ட ருவிற்றர் பதிவில், “சாதாரண பயநர்கள் தொடர்ந்து எப்போதும் ருவிற்றரை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயநர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.