தற்போதைய வரிக் கொள்கை செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை, இலங்கை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற 2023 வரி மாநாட்டில், ஆரம்ப உரை நிகழ்த்திய ஜனாதிபதி, தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி, மீட்பு நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனம் தவிர்ந்த எந்தவொரு கட்சியோ, நபரோ அல்லது நிறுவனமோ சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளையோ அல்லது மாற்று வழிகளையோ சமர்ப்பிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டவுடன், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது, அதனை நிறைவேற்றவோ அல்லது நிராகரிக்கவோ வாய்ப்பு இருக்கிறது.
அதனை நிராகரிப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும். நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களான பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கு நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், ,இந்தியா தமக்கு தனித்துவமான முறையை பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நாளைய தினம், இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், அவற்றின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.