வழிபாட்டுத் தலங்களுக்கு மானிய விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கான கொள்கை ஒன்றை வகுக்குமாறு மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு இதுவரை மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நடைமுறை இரத்து செய்யப்பட்டமை கவலைக்குரியது என மகாநாயக்க தேரர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத் தலங்களில் பாரம்பரியமாக நடைபெற்று வருகின்ற நிகழ்வுகள் நிறுத்தப்பட்டால், மக்கள் மத வழிபாட்டுத்தலங்களில் இருந்து விலகிச்செல்வார்கள் எனவும் இதனால் சமூகத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
புத்த சாசனத்தை போஷித்து பாதுகாப்பதாக அரசியலமைப்பின் ஊடாக உறுதியளித்துள்ள அரசாங்கம், மத வழிபாட்டுத்தலங்களை நிதி ஈட்டும் தொழிற்சாலைகளாகக் கருதி செயற்படுவதால், பௌத்த விஹாரைகள் உள்ளிட்ட ஏனைய மத வழிபாட்டுத்தலங்களை நடத்திச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.