வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்மானம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் குழுவின் கூட்டம் இடம்பெற்றபோது இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் எதிர்பார்த்த வருமானத்தை சுங்கத்தினால் பெற முடியவில்லை என சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடம் 1226 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முதல் 5 மாதங்களில் 330 பில்லியன் ரூபாவே வருமானமாக கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் கடன் உதவி முறையின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணியை சேமிப்பதன் மூலம் சுங்க வருமானத்தை அதிகரிக்க முடியும் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.