இஸ்ரேல் பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக பிரதமர் நப்தலி பென்னட் அறிவித்துள்ளார். நப்தலி பென்னட் தலைமையிலான கூட்டணி சிறுபான்மை அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தலுக்குச் செல்லும் அறிவிப்பை பிரதமர் நப்தலி பென்னட் திங்கட்கிழமை வெளியிட்டார். இதன்மூலம் 3 ஆண்டுகளில் 5 ஆவது பொதுத் தேர்தலை இஸ்ரேல் விரைவில் எதிர்கொள்ள உள்ளது.
புதிய தேர்தல் குறித்த அறிவிப்பு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுக்கலாம் அல்லது நீடித்த அரசியல் குழப்பத்தின் மற்றொரு காலகட்டத்திற்கு களம் அமைக்கலாம் என இஸ்ரேல் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்று திசைமாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன். அதனை என்னால் உணரமுடிகிறது என தேர்தல் அறிவிப்பு குறித்து முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வெளியிட்டுள்ளார்.
எனினும் மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகுவை அவரது லிகுட் கட்சி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினாலும் அவரால் பெரும்பான்மை பெற முடியுமா? என்பதும் கேள்விக்குறியாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நெதன்யாகுவின் முன்னாள் கூட்டாளியும் உதவியாளருமான பிரதமர் நப்தலி பென்னட் ஒரு வருடத்திற்கு முன்பு தனது அரசாங்கத்தை அமைத்தார். ஆனால் பலவீனமான கூட்டணி அரசாங்கம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெரும்பான்மையை இழந்தது.
இந்நிலையிலேயே நேற்று அரசாங்கத்தை கலைக்கும் திட்டத்தை அறிவித்த பிரதமர் நப்தலி பென்னட், கடினமான சூழ்நிலையில் தான் சரியான முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார். நாங்கள் ஒன்றாக இணைந்து இஸ்ரேலை குழியிலிருந்து மீட்டோம். இந்த வருடத்தில் பல விடயங்களை சாதித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் பெரிய மத்திய வாதக் கட்சியான யெஷ் அடிட் (Yesh Atid) கட்சித் தலைவராக இருக்கும் யேர் லேபிட் இடைக் காலப் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவர் நெதன்யாகுவுக்கு முக்கிய போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.