எவருக்கும் சும்மா உணவளிக்க முடியாது. இதனால் வேலை செய்யாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனடியாக விலகிச் செல்லுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இனி எமக்கு நாங்களே உதவியாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைத்துவிட்டன. இந்தியா, அமெரிக்கா, உலக வங்கிகள் உதவிகள் வழங்கியுள்ளன. இந்த உதவிகளை பெற்றுக்கொண்டு நாங்கள் எமது விவசாயத்தில் நெற்பயிர் செய்கையில் இட்டு அதனை ஆரம்பிப்போம் என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த வேலைத்திட்டங்களை செய்யும் போது, இங்கு அனைவருக்கும் வேலைத்திட்டங்கள் உள்ளன. இதில் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என்ன குறைபாடுகள் உள்ளன என்று தேடிப்பார்க்க வேண்டும்.
அதன்போது தேவையான உதவிகளை வழங்க முடியும். வேறு பயிர் செய்கைகளை செய்ய முடியுமாக இருந்தால் அதற்கு தேவையான உதவிகளையும் வழங்கலாம். இதேவேளை கிராம சேவகர், சமூர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 9 பேர் கிராம மட்டத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கென பயிர்செய்கைக்கு என்று பகுதிகளை வழங்கலாம். வேலை செய்வதென்றால் செய்யுங்கள், முடியாவிட்டால் வீட்டுக்கு போய்விடுங்கள், சும்மா இருந்துகொண்டிருக்க முடியாது. இதனை மாவட்ட செயலாளர்கள் அவதானிக்க வேண்டும். எவருக்கும் சும்மா சாப்பிட முடியாது. எதையாவது செய்ய வேண்டும். நாங்களே செலுத்துகின்றோம். எனக்கும் சும்மா இருக்க முடியாது. எதையாவது செய்ய வேண்டும். இதனை அபிவிருத்தி செய்யாவிட்டால் நானும் போகவேண்டி வரும். இதனால் வேலைத்திட்டங்களை கிராமத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்றார்.