இப்போதைய நிலைமையில் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒருமித்த நிலைப்பாட்டுடனும், ஒன்றுமையுடனும் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்காகவே தமிழ்க்கட்சிகள் இடையே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுமையுடன் இருக்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக நாம் மேலும் கூடி ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடுவோம். இந்த முயற்சிக்கு அனைவரது ஆதரவையும் எதிர் பார்க்கின்றோம். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று கொழும்பில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசமைப்புத் தொடர்பாக பேசப்படுகின்றது. அதேநேரம் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கருத்தும் வெளியாகியுள்ளது. இலங்கை அரசின் நடவடிக்கைகளை நம்ப முடியாது. கடந்த காலங்களிலும் இவ்வாறு நடந்துள்ளன. அரசின் செயற்பாடுகள் திடீரெனக் கடும்போக்காக மாறலாம். 1983 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியா, இலங்கைத்தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறையாக இருக்கின்றது. தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. பல விதமான நிகழ்வுகள் இந்தியாவின் தலையீட்டால் நடைபெற்றன. 13ஆவது அரசமைப்புத் திருத்தம் 1988ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 13ஆவது அரசமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை . 13ஆம் திருத்தச்சட்டத்தில் இருந்து சில அதிகாரங்களை நீக்குவதற்கான செயற்பாடுகளும், அவற்றை மத்திய அரசு கையாள்வதற்கான சூழலுமே இப்போது காணப்படுகின்றன.
இந்திய உயர் அதிகாரிகள் இங்கு வருகின்றபோது 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆயினும் இதுவரை அது நடக்கவில்லை . இவற்றையெல்லாம் உன்னிப்பாக அவதானிக்கும்போது எம்மிடையே ஒன்றுமை, ஒருமித்த கோரிக்கையை தமிழ் பேசும் மக்கள் சார்பாக முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது- என்றார்.