13 ஆவது திருத்தம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து சர்வதேசத்துக்கு விளக்கம்-அலிசப்ரி

13வது திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி விளக்கமளித்துள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகளுக்கு இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு ஆதரவு வழங்கியமைக்காக சர்வதேச சமூகத்தினருக்கு நன்றி தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், இது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் விளக்கமளித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்குவிப்பதற்காக நாட்டின் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், நாடுகளின் பயண ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் அலிசப்ரி இதன்போது கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளையும் அமைச்சர் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை அமைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்த மேலதிக தகவல்களையும் வெளிவிவகார அமைச்சர் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Spread the love