13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு இந்திய இல்லத்தில் நேற்று சந்தித்தது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.
அத்துடன், உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதியினால் உறுதியளிக்கப்பட்ட 4 முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறியதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார். மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என ஜெய்சங்கர் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார்.