நாட்டிற்கு தேவையான மருந்துகளை இந்திய மருந்து விநியோகஸ்தர்களிடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் எதிர்வரும் 14 நாட்களில் நாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் வசதியின் கீழ் மருந்துகள் உட்பட சுமார் 1,700 பொருட்கள் பெறப்படவுள்ளதாகவும் பொருட்கள் மற்றும் மருந்துகளை கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, காலாவதியான Pfizer தடுப்பூசிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.