2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாளை திங்கட்கிழமை நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த வரவுசெலவுத் திட்டத்தில் புதிய நிதிச் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தப்படும். புதிய சில வரிகள் அறிவிக்கப்படலாம்.
அத்துடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம். இதனால் சமரசமற்ற தைரியமான சில முடிவுகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே வரிச் சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். மதிப்பு கூட்டு வரி (VAT) 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றும் வரி வரம்பை குறைக்கும் அதேவேளையில் தனிநபர் வருமான வரி விகிதங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. முக்கிய வரிகள் பல ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மேலும் சில புதிய வரிகளை நாங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கிறோம் என்று கொழும்பை தளமாகக் கொண்ட பொருளாதார நிபுணர் டிமந்த மத்யூ தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத் திட்டத்தில் செலவுகளை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் வெளிவரலாம். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம். இது ஒரு சீர்திருத்த வரவு-செலவுத் திட்டமாகவே இருக்கும். ஏனெனில் மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்க அரசிடம் பணம் இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்த வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை எவ்வளவு தூரம் குறைக்க முடியும் என்பதே முக்கிய கவலையாக இருக்கும் எனவும் டிமந்த மத்யூ மேலும் குறிப்பிட்டார்.