நாட்டு மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை அறிவித்தார்.
இது (02) வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 07 நாட்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும், குறிப்பாக இது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இங்கு இலக்கம் தொடர்பில் தெளிவில்லாத இடங்கள் காணப்படுகின்றன. தற்போது கடைசியாக 20வது அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றுமொரு அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைத்துள்ளது. ஆனால் அது 21வது அரசியலமைப்பு திருத்தம். அதன்போது அது ஒரு தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையாகவே முன்வைக்கப்பட்டது. பின்னர் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தனிப்பட்ட பிரேரணையாக தான் முன்வைத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன் பின்னர், அரசாங்கத்தின் முன்மொழிவாக, தான் நீதி அமைச்சராக இருந்த போது 22 வது அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைத்தேன், பின்னர் தான் தனிப்பட்ட முறையில் முன்வைத்த 22 வது அரசியலமைப்பு திருத்தத்தை வாபஸ் பெற்றேன். தற்போது, இது 22 வது அரசியலமைப்பு திருத்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் போது, 21 வது அரசியலமைப்பு திருத்தம் என்று இலக்கமிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னர், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மாதிரியின் பிரகாரம் இத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், 20ஆவது அரசியலமைப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பலவீனங்களை நாம் கண்டறிந்துள்ளோம். அவற்றை நீக்கி 20ஆவது அரசியலமைப்பின் நல்ல விடயங்களை சேர்ப்போம். எனவே இதை 19ஆவது அரசியலமைப்பின் திருத்தம் என்று கூற முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இங்கு விசேட வேறுபாடுகள் காணப்படுகின்றன. அது 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை விடவும் அதிகம். 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் அதிகாரம் பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்திருத்தத்தின் பிரகாரம் பிரதான கட்சி, பிரதான எதிர்க்கட்சி மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரம் அந்தந்த கட்சிகளிலுள்ள குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது சபாநாயகரின் மேற்பார்வையில் இடம்பெறும் விடயங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.