சீன ஜனாதிபதியாக 69 ஆவது வயதில் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மா சேதுங்கிற்கு பின்னர் 3-ஆவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார் ஷி ஜின்பிங்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது கூட்டம் கடந்த வாரம் ஆரம்பமாகியது. இக்கூட்டத்தில், ஷி ஜின்பிங் 3 ஆவது முறையாக ஜனாதிபதியாக தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கட்சியின் சக்திவாய்ந்த அரசியல் தலைமைக் குழுவுக்கு கடந்த சனிக்கிழமை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழு ஞாயிற் றுக் கிழமை கூடி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொள்வதற்கான 7 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது.
முற்றிலும் ஜின்பிங்கின் ஆதரவாளர்களான இக்குழு கட்சியின் பொதுச் செயலராக ஷி ஜின்பிங்கை தேர்வு செய்தது. 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான ஷி ஜின் பிங், இப்போது இரண்டாவது முறையாக அதிபராக இருக்கிறார். அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிகழாண்டு நிறைவு பெறும் நிலையில், கட்சியின் பொதுச் செயலராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மூன்றாவது முறையாக அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மா சேதுங்கிற்குப் பின் ஜனாதிபதியாக இருந்தவர்கள் அதிகபட்சம் இருமுறை அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் தொடரவில்லை. அந்த வரலாற்றை மாற்றியுள்ளார் ஷி ஜின்பிங்.