பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு எதிர்வரும் 6 மாத காலங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் முதல் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இதற்கான நிதியை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கவுள்ளதாக செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு நெருக் கடிகளை எதிர்நோக்கும் 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலைமையில் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ள போதும் ஊதியங்களில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட ஏனைய சகல பொருட்களுக்குமான விலைகள் அதிகரித்துள்ள போதும் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை.