367 பொருள்களின் இறக்குமதிக்கு தடை


இலங்கை அரசாங்கத்தால் அத்தியாவசியமற்றவை என்று கருதப்படும் 367 பொருள்களுக்கு இறக்குமதித்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதித் தடை நேற்று நள்ளிரவு முதல் நடை முறைக்கு வருகின்றது என்று நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது பெரும் அந்நியச் செலாவணிப் பிரச்சினையை எதிர் கொண்டுள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ச்சி இறக்குமதித் தடைகளை விதித்து வருகின்றது. அண்மையில், அத்தியாவசியமற்றவை என்று கருதப்படும் 600 பொருள்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 367 பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ள பொருள்களில் பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்கள், பட்டர், ஜோக்கட், அன்னாசி, மங்குஸ்தான் மற்றும் பழங்கள், ஒரேஞ், அவகாடோ, மீன், பாஸ்தா, நூடில்ஸ், இறைச்சிகள், முட்டை, அப்பிள், திராட்சை, பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அழகு சாதனப் பொருள்கள், வெளி நாட்டு மதுபானம் மற்றும் பீர் வகைகள், பேரீச்சம்பழம், தண்ணீர், பாதணிகள், இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், வீட்டுப் உபயோகப் பொருள்கள் என்பனவும் அடங்குகின்றன. அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டுமே இத்தகைய பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும், அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடைகளால் பல பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பொருள்கள் பலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. தற்போது மேலும் பல பொருள்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பொருள்களின் விலைகளும் சடுதியாக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது.

Spread the love