ஐ.தே.க. தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதில் அரசுடன் இணைந்து எதிரணியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்.பி.க்களான ஜீவன் தொண்டமான் .ராமேஸ்வரன் ஆகியோரும் எதிரணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த துமிந்த திசாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன ஆசியோரும் வாக்களித்தனர். வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்கட்சிகளான ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி (ஜேவி.பி.) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, வாசுதேவநாணயக்கார தலைமையிலான அணியினர் வாக்களித்தனர்.
அதேபோன்று எதிரணியில் உள்ள அதாவுல்லா எம்.பி. அலி சப்ரி ரஹீம் எம்.பி. ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர். இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு சபைக்கு வராத நிலையில் வாக்களிப்பில் பங்கேற்காத அதே வேளை தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இருந்த போதும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இதனால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் 18 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 7 நாட்களாக இடம்பெற்ற விவாதத்தை தொடர்ந்தே நேற்று செவ்வாய்க்கிழமை 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறியதையடுத்து இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு இடம்பெற்றது.