போர்த்துக்கல் – அஸோர்ஸ் தீபகற்பத்தில், 4,000 சொகுசுக் கார்களுடன் தீப்பற்றியெரிந்த கப்பல் கடலில் மூழ்கியது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தீப்பற்றிய இந்தக் கப்பலில் தீயை அணைப்பதற்கு கடுமையாகப் போராடிய போதும் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் குறித்த கப்பல் நேற்று முன்தினம் கடலில் மூழ்கியது. ஃபெலிசிட்டி ஏ.எஸ் எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், போர்ஷஸ் மற்றும் பென்ட்லீஸ் நிறுவனங்களின் 4,000 சொகுசுக் கார்களை ஏற்றிச் சென்றது. ஜேர்மனியின் எம்டன் துறைமுகத்திலிருந்து, அமெரிக்காவின் ரோட் தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, குறித்த கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது.
கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கப்பலிலிருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மூழ்கிய கப்பலிலிருந்து இதுவரை எண்ணெய்க்கசிவு எதுவும் பதிவாகவில்லை. ஆனால், கப்பல் அட்லாண்டிக் அடிவாரத்தில் மூழ்கும் போது அதன் எரிபொருள் தாங்கிகள் சேதமடையக் கூடுமென்று அஞ்சுவதாக ஃபையல் தீவின் அருகேயுள்ள துறைமுகத்தின் கப்டன் ஜோவோ மெண்டெஸ் கபேகாஸ் தெரிவித்தார். கப்பல் மூழ்கிய கடற்பரப்பு சுமார் 3,500 மீற்றர் (2.17 மைல்கள்) ஆழம் கொண்டதாகும். தீப்பற்றியெரிந்து மூழ்கிய கப்பலிலிருந்த கார்களின் பெறுமதி மட்டும் சுமார் 155 மில்லியன் டொலர்களாகுமென மதிப்பிடப்பட்டது.