2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் (பாலிஸ்டிக்) ஏவுகணையை வட கொரியா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏவியுள்ளது. இது வடகொரியாவின் ஆயுதத்திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் பெரிய சோதனைகளின் அறிகுறி என்று தென் கொரியாவின் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் கொரிய மற்றும் ஜப்பானிய அரசாங்கங்கள் இரண்டும் குறித்த பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஏவுகணையானது கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள நீர்ப்பரப்பில் 2,000 கிலோமீற்றர் உயரம், 800 கிலோமீற்றர் தூரம் பயணித்ததாக டோக்கியோவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை வட கொரியாவின் ஜகாங் மாகாணத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:52 மணிக்கு ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப்படை தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.