மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதை அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். அரிதான பச்சை வால் நட்சத்திரத்திற்கு C/2022 E3 (ZTF) என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டது.
வால் நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வுகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பச்சை வால் நட்சத்திரம் வருகிற பெப்ரவரி 2 ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதை பகல் நேரங்களில் பைனாக்குலர் மூலமாகவும், இரவில் வெறும் கண்களாலும் பார்க்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் வால் நட்சத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50,000 ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் வால் நட்சத்திரம் இதுவாகும்.
இந்த வால் நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியை நெருங்கி வந்ததாக கூறப்படுகிறது. அரிய பச்சை வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி ஒரு சுற்றுப்பாதையை கொண்டுள்ளது. அது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. இதனால் தான் பூமியை சுற்றி வர நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது.