சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில், இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை கௌரவத்துடன் வரவேற்ற ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவுகூர்ந்தார். கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் சீனாவிடமிருந்து கிடைத்த பொருள் மற்றும் நிதி உதவிகளுக்காக, சீன வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி அவர்கள், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மீட்டிப்பார்த்த வாங் யீ அவர்கள், மீண்டும் இலங்கைக்கு வருகைதரக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், நெருக்கமான நண்பன் என்ற வகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.கொவிட் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, இலங்கைக்கு சைனோஃபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவுக்கும், ஜனாதிபதி அவர்கள் சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை உயிர்க் குமிழிக்குள் மட்டுப்படுத்தி இலங்கைக்கு வரவழைப்பதற்கு உதவுமாறு, வாங் யீயிடம் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
அதேபோன்று, சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளின் போது சலுகை வர்த்தகக் கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், கைத்தொழிற்றுறையைத் தடையின்றி சீராக நடத்த முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்த வாங் யீ அவர்கள், எதிர்வரும் காலங்களில் அது நிறைவேறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
சீனத் தூதுவர் சீ ஷென்ஹோங் (QI Zhenhong), பிரதி வர்த்தக அமைச்சர் ஷிஆன் கேமின் (QIAN Keming), உதவி வெளியுறவு அமைச்சர் வூ செங்ஹொன் (WU Jianghao), சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் சொன்ங் மோஓயு (HZHANG Maoyu), வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.