இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக்கோரி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமுகமாக இன்று வியாழக்கிழமை இடம்பெறும் நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
1000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்தும் அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தத்தினை வழங்குமுகமாகவும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டி நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.