அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று (06) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாளைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP எனப்படும் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கான சேவைகளை இன்று முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு தாம் ஆதரவு வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து ஹோட்டல்களிலும் கறுப்புக்கொடியை பறக்கவிடுமாறும் ஹோட்டல்களுக்கு முன்பாக கவனயீர்ப்பை முன்னெடுக்குமாறும் ஊழியர்களிடம் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இன்றைய தினம் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக 011 263 5675 எனும் விசேட தொலைபேசி இலக்கத்தை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனிடையே நேற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வட மாகாண இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனம், ஏறாவூர் வர்த்தக சங்கம் மற்றும் இந்து லங்கா சமூக அமைப்பு என்பன இந்த அழைப்பை விடுத்துள்ளன. ஒரே குறிக்கோளோடு ஹர்த்தாலுக்கான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்து லங்கா சமூக அமைப்பின் தலைவர் கிருஷ்ணகோபால் திலகநாதன் தெரிவித்தார்.
இதனிடையே, மட்டக்களப்பிலுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஏறாவூர் வர்த்தக சங்கத்தின் ஏ.எம். அஸ்மி கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் விடுதலை முன்னணி இன்று யாழ். நகரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது.