ஜனநாயக நாடு எனக்கூறிக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம், போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடங்குகின்றன என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால நிலை தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசாங்கம் போராட்டங்களை அடக்குவதை நோக்கமாகக் கொண்டு அவசரகாலச் சட்டம் பிறப்பித்துள்ளது. அவசரகால சட்டத்தின் அடிப்படையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசாருக்கும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படுகின்றது.
பிரதமரை காப்பாற்றுவதாக திடீரென அலரி மாளிகை முன்பு கூடிய கும்பல், பல நாட்களாக போராடி கொண்டிருந்த மக்கள் வெளியேற வேண்டும் என்று அடிதடியில் ஈடுபட்டனர். காலி முகத்திடல் போராட்ட களத்திலும் பிரச்சினைகள் உருவாக்கப்படுகிறது. இதனை பார்க்கின்ற போது மிக விரைவாக காலி முகத்திடலில் உள்ள முழு போராட்டகாரர்களையும் விரட்டியடித்து காலி முகத்திடலை மக்கள் போக்குவரத்தற்ற பிரதேசமாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.
ஆகவே இந்த அவசரகால சட்டத்தின் நோக்கம், இந்த போராட்டங்களை இல்லாமல் செய்து அரசாங்கம் தான் விரும்பியவாறு விடயங்களை கையாள்வதற்காக அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தியது.ஆனால் ஜனநாயக நாடு எனக்கூறிக் கொண்டிருந்த இலங்கை அரசாங்கம், போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடங்குகின்றன. அவசரகாலச் சட்டம் பிறப்பித்து இருக்கின்ற சூழ்நிலையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இடத்திற்கு அரசுக்கு சாதகமான மற்றொரு போராட்டக் குழுவை அழைத்து வந்தமை பிரச்சினையை உருவாக்க அரசாங்கம் தீட்டிய திட்டமே தவிர வேறு எதுவுமே கிடையாது” என்றார்.