இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விளக்கமளித்துள்ளது.
இதற்கமைய, இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தை முற்றாக மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளது.
குறித்த பதிவில், இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பான இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு உறுதுணையாக இருப்பதாகவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாக தெரிவித்திருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதேவேளை, சுப்ரமணியம் சுவாமி ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கை தொடர்பில் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப மாட்டாது என்று இந்தியா கூறவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.