இலவச சுகாதார சேவையை தனியார்மயமாக்க அரசியல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சி

இலங்கையின் இலவச சுகாதார சேவையை தனியார்மயமாக்க அரசியல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இலங்கையின் மருத்துவத்துறை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துப்பொருட்களின் விலை உயர்வு என்பன நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் இந்தப் பகிரங்கப்படுத்தல் சாமான்ய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலவச சுகாதார சேவைகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி அதனை தனியார் மயமாக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வாழ்வதற்கான உரிமை மற்றும் அதில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆரோக்கியத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கங்களின் கடமை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதனைவிடுத்து இலவச சுகாதார சேவையை தனியார் மயமாக்குவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு அந்தச் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், சுகாதார அமைச்சரை நியமிப்பதிலும், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதிலும் அலட்சிய மனப்பான்மை காணப்படுவதுடன், சுகாதார ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தலைமை நிதி அதிகாரிகள் உள்ளிட்டோரின் முயற்சியானது சுகாதார அமைச்சர் இல்லாத நிலையை எடுத்துக்காட்டுவதுடன், சுகாதார ஊழியர்கள் மேலும் துன்புறுத்தப்படவும் ஏமாற்றப்படவும் வழிகோலுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் ஒரு மோசடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், மக்கள் வலியுறுத்துகின்ற விடயங்கள் தொடர்பில் அரச தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Spread the love