தென்னிலங்கை போராட்டம், தமிழ் மக்கள் ஆதரவு வழங்காதது ஏன்? -தெற்கு பிரதிநிதிகள் யாழில் விரிவாக ஆராய்வு 

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் தென்னிலங்கைப் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்காமல் ஒதுங்கியிருப்பதற்கான காரணங்கள் தொடர்பில் வட-கிழக்கு பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும்  சம்மேளன முக்கியஸ்தர்களிடம் தென்னிலங்கை தொழிற்சங்க வெகுஜன அமைப்பு ஒன்றிய பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.

கொழும்பிலிருந்து யாழ். சென்ற தென்னிலங்கை தொழிற்சங்க வெகுஜன அமைப்பு ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் வட-கிழக்கு பொது அமைப்புக்கள், வட-கிழக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளன முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்.பல்கல்லைக்கழக ஊழியர் சங்கத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் தென்னிலங்கை தொழிற்சங்க வெகுஜன அமைப்பு ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் எட்டு தொழிற்சங்கங்களில் தலைவர்களும் வட-கிழக்குப் பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளன உள்ளிட்ட 20 மேற்பட்ட அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் பங்கு கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் மக்களின் அபிலாஷைகள், இனப்பிரச்சினை, அதனால் ஏற்பட்ட யுத்தம், பேரழிவுகள், யுத்தத்திற்குப் பின்னர் தொடரும் அடக்கு முறைகள், பல்வேறு விதத்திலும் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாகவும் தற்போது தெற்கிலுள்ள சிங்கள மக்களுக்கு எதிரான அடக்குமுறை, வன்முறை, இராணுவமயமாக்கல், பொருளாதார நெருக்கடி என்பனவற்றை கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்கள் எதிர் கொண்டமை குறித்து வடக்கு, கிழக்கு அமைப்புகள் தெற்கு பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

தமிழ் மக்கள் சந்திக்கின்ற உடனடிப் பிரச்சினைகளான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகள் விடுதலை, காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கல் போன்ற பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர். அத்துடன் தெற்கு போராட்டத்தின் பிரகடனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் இடம்பெற வேண்டுமென வடக்கு, கிழக்கு அமைப்புகள் தெற்கு ஒன்றியப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினர். இந்நிலையில் இந்த விடயங்களை ஏற்றுக் கொள்வதாகவும் தென்னிலங்கைக்கு இந்தக் கோரிக்கைகளை எடுத்துச் செல்வதாகவும் தெற்கு ஒன்றியப் பிரதிநிதிகள் பதிலளித்துள்ளனர்.

Spread the love