தீயில் தீய்ந்த தமிழறிவு பெட்டகம்- 41 ஆண்டு நினைவு நாள்

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்பது புரட்சியாளர் சேகு வேராவின் பிரபலமான பொன்மொழிகளுள் ஒன்று. இந்தக் கூற்றுக்குத் தகுந்தாற்போலவே எம் தாயகத்திலும் மறக்க முடியாத பேரவலச் சம்பவம் இற்றைக்கு நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறியிருந்தது. சக்தி படைத்த பல்வேறு அரிய நூல்களைத் தன்னகத்தே கொண்டு அறிவுலகின் ராஜகோபுரமாக யாழ். மண்ணில் ஆட்சிபுரிந்த தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயிற்கு இரையாக்கப்பட்ட வரலாற்றின் சோகமான, மோசமான நாள் இன்றாகும்.

அத்திபாரமும் ஆரம்பமும்

1933ஆம் ஆண்டு கார்த்திகை 11ஆம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்தவரும், யாழ். நீதிமன்ற காரியதரிசியாகவும் விளங்கிய கே.எம். செல்லப்பா, தன் வீட்டில் நடத்தி வந்த நூலகத்தை பலருக்கும் பயன்படவேண்டுமென்ற சிந்தனையில் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். 1934ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் திகதி ஐசக் தம்பையா தலைமையில் யாழ். மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமே பொதுநூலகத் தோற்றத்துக்கான ஆரம்பமாய் அமைந்தது. இந்த நூலகத்துக்காக கே.எம். செல்லப்பா, தான் சிரமப்பட்டு சேர்த்த 184 ரூபா 22 சதத்தை மூலதனமாக இட்டார்.

மருத்துவமனை வீதியில் கிடைத்த வாடகை அறையொன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும் 1934ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி ஆரம்பித்த சிறியளவிலான பொது நூலகமானது போதுமான வசதிகளற்ற காரணத்தால் யாழ். பட்டினசபை அதனை பொறுப்பேற்றுக்கொண்டது. 1935ஆம் ஆண்டு யாழ். கோட்டைக்கருகே புதிதாய் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையில் அமைந்துள்ள இடத்துக்குப் பொது நூலகமானது மாற்றப்பட்டது. சகல வசதிகளுடனான பொதுநூலகத்தை உருவாக்கும் முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி சபாபதி என்பவரின் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன.


நவினமும் அழிவும்

நவீன நூலகத்தை அமைக்கும் பணிகளில் வண. பிதா லோங் வருமளவு அக்கறையுடனும் துடிப்புடனும் செயற்பட்டார். மேலும் நூலகத்துறை நிபுணரான கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதனும் பெருமளவு ஆதரவை நல்கினார். நூலக அமைப்புத்திட்டத்துக்கான வரைபட உதவிகளை சென்னை அரசின் கட்டடக்கலை நிபுணர் கே.எஸ். நரசிம்மன் வழங்கினார். இவ்வாறாக நல்மானிடர்களின் பேராதரவோடு 1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி பொது நூலகத்துக்கான அடிக்கலிடப்பட்டு 1959ஆம் ஆண்டு அப்போதைய யாழ். மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பாவால் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. பின் குழு நிர்மாணிப்புப் பணிகளும் நிறைவுற்று 33 பேர் வரையில் நூலகத்தில் கடமையாற்றினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் யாழ்ப்பாண மண்ணில் இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த ஆசியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் செயற்பட்டு வந்தது. ஏகப்பட்ட புத்தி ஜீவிகளை அது உருவாக்கியது. அதன் அபரிமிதமான வளர்ச்சி சிலரின்  கண்களை வெகுவாகவே உறுத்தியது. இதன் விளைவாக அந்த அறிவுச் சாம்ராச்சியம் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் முக்கிய நபர்களாலும் அரச அடிவருடிகளின் துணைகொண்டு 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நாளின் முன்னிரவில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. மே மாதத்தின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் ஆகப்பெரும் அநீதியாக – அழிவாக இந்த நூலக அழிவே அமைந்தது.

எரிந்து அழிந்துவிட்ட அரிய பொக்கிசங்கள்

வானளவுக்குக் கரும்புகை சூழ சுவாலை பரப்பிளிந்த அந்தத் தீயில் கி.பி.1800ஆம் ஆண்டு யாழில் தகவல் பரிமாறிய செய்தி ஏடுகள், சித்தமருத்துவம் சம்பந்தமான பனையோலைச் சுவடுகள், சேர்.பொன். இராமநாதனின் பகவத்கீதை விளக்கம், திருமதி இராமநாதனின் இராமாயண மொழிபெயர்ப்பு, 1585ஆம் ஆண்டு கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதிய நூல்கள், கி.பி. 1060இல் றொபேட் நொக்ஸ் எழுதிய இலங்கை வரலாறு, யாழ் வரலாற்று நாலான முதலியார் நாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம், தமிழில் முதலில் வெளிவந்த இலக்கியக் களஞ்சியமான முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதான கோசம், அதன்பின் வெளிவந்த சிங்கார முதலியாரால் தொகுக்கப்பட்ட அபிதான சிந்தாமணி, இந்திய வர்த்தகரால் வழங்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்திய சோதனை, கிடைப்பதற்கரிய இலக்கியம், சமயம், மொழியியல், தத்துவம் சம்பந்தமாக ஐசக் தம்பையா நன்கொடையாக நல்கிய 6 ஆயிரம் நூல்கள், 1672ஆம் ஆண்டில் பிலிப்போல்டியஸ் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை தொடர்பான 10 ஆயிரத்துக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள், மகாகவி பாரதியாரின் நண்பர் நெல்லையப்பர் எழுதிய நூல், கடலைக்குடி நடேச சாஸ்திரியாரின் சோதிட மற்றும் வான சாஸ்திர நூல்கள், இரவல் வழங்கும் பகுதியில் இருந்த சுமார் 57 ஆயிரம் நூல்கள், சிறுவர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரத்து 995 நூல்கள், உசாத்துணைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 29ஆயிரத்து 500 கிடைத்தற்கரிய நூல்கள் என லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகின.

நூலகம் எரிவதைக்கண்டு உயிரிழந்த தாவீது அடிகள்

1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முன்னிரவில் நூலக எரிப்புச் சம்பவத்தை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் மேல்மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்த பேரறிஞரும் மொழி ஆராய்ச்சியாளருமான 74 வயதான தாவீது அடிகள் தன் வாழ்விடத்தில் இருந்தவாறு நேரில் கண்டு (தாவீது அடிகள் வாழ்ந்துவந்த பத்திரிசியார் கல்லூரியின் மத்தியூஸ் மண்டபம் மிகப்பெரியது. அதில் நின்று பார்த்தால் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தெரியும்) அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் உண்டான மாரடைப்பால் உயிரிழந்தார். 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நாள் மிகப்பெரும் கறுப்பு நாளாக உலகத் தமிழர்களுக்கு மாறியது. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமெனில் அதன்பண்பாடு, அறிவுசார் ஆவணங்களுடன் அதன் வரலாற்றையும் எவ்வித தடையமுமின்றி அழிக்க வேண்டுமென்ற மாக்கியவல்வியின் கோட்பாடுகளை, வக்கிரமனம் கொண்ட பயங்கரவாத அமைப்புகள் பின்பற்றும் இன அழிப்புக்கொள்கையை, யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரித்தழிக்கப்பட்ட இழிசெயலும் கட்டியம் செய்கின்றது.

மீளெழுச்சியும் பேரெழுச்சியும்

இத்தனை துயருக்கும் துவண்டிடாத நூலகம் மீண்டும் 1996-1997ஆம் ஆண்டுகளில் மீளக் கட்டமைக்கப்பட்டது. மங்கள சமரவீரவின் வெள்ளைத்தாமரை அமைப்பால் அந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனை லக்ஷ்மன் கதிர்காமர் பொறுப்பேற்றார். தற்காலத்தில் மிளிரும் பொதுநூலகம் பல்வேறு அறிவுசார் நடவடிக்கை, கல்வி நடவடிக்கைகளுக்கு உரமூட்டியிருப்பினும் இக்காலத்தலைமுறையும், இனி எக்காலத் தலைமுறையும் தர முடியாததுமான அரும்பெரும் பொக்கிசங்களை இழந்துவிட்டது என்பதே உண்மை நிலவரம். ஒரு நூல் நிலையத்தின் கதவு திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகின்றது என்றார் சுவாமி விபுலானந்தர். இன்று சிறைச்சாலைக் கதவுகள் பல திறந்து தாரளமாக குற்றமிழைத்தோரை வரவேற்கக் காத்திருக்கின்றன எனில் அதற்குக் காரணம் அறிவினைப் புகட்டக்கூடிய நூல் நிலையங்களின் கதவுகள் மூடப்படுவதும், திறந்துள்ள நூல் நிலையத்தைப் பயன்படுத்தாமையுமே.

கேள்விக்கென்ன பதில்?

நூலகம் தீக்கிரையான பின்னணியில் பல கேள்விகளுக்கு இன்று வரையும் பதில்கள் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்றல்ல நாளையல்ல இன்னும் எத்தனை தசாப்தங்கள் கடந்தாலும் அந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் வரப்போவதில்லை.

1. 1981 ஆம் ஆண்டு மே இறுதி நாள்களில் யாழ்ப்பாணத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவின. இதனால் படையினரின் பாதுகாப்பும் கண்காணிப்பும் பரவலாக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் எவ்வாறு இந்த நூலகம் எரிக்கப்பட்டது?

2. நூலகத்தில் இருந்து வெறும் 250 மீற்றரில்தான் அப்போதைய பொலிஸ் தலைமையகம் இருந்தது. அப்படியிருந்தும் நூலகம் எரிவதை ஏன் தடுக்க முடியாமல் போனது?

3. அக்காலத்தில் நூலகத்துக்கு மிக அருகாக இருந்த விடுதியில் யாழ்ப்பாணத்துக்கு வந்த இரு அமைச்சர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆதலால் அரச படைகள் குவிக்கப்பட்டு உச்சக்கட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறிருந்தும் அமைச்சர்கள் தங்கவைக்கப்பட்ட இடத்துக்கு மிகச் சமீபமாக உள்ள இவ்வளவு பெரிய அறிவுப்பொக்கிசம் தீக்கிரையாக்கப்படுகின்றதெனில் அதை யார் செய்திருப்பர்?

4. இந்தக் கேள்விகள்தான் மேற்சொன்ன விடைதெரியாத, விடை தெரிவிக்கப்பட விரும்பாத கேள்விகள். இவற்றுக்குப் பதில்கள் கிடைத்திருந்தால்தான் என்றோ இலங்கை உருப்பட்டிருக்குமே!

Spread the love