அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட திரவ உரத்தினால் தமக்கு எந்த வித பயனும் கிடைக்கவில்லை என வட்டக்கச்சி இராமநாதபுரம் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட விவசாயிகள் வயலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் கமநல சேவை நிலையத்தின் கீழ் இம்முறை மூவாயிரம் ஏக்கரிற்கும் மேற்பட்ட அளவு காலபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு யூரியா தடை செய்யப்பட்ட நிலையில் யூரியாவுக்கு பதிலாக வழங்கப்பட்ட நனோ திரவ உரம் மற்றும் Eco vita என்ற திரவ உரங்களினால் எந்த விதமான பயனும் கிட்டவில்லை என்பது கண் கூடாகத் தெரிகின்றது. இந்த வயலை நம்பி எம்மால் அடகு வைத்த நகைகளை எப்படி மீட்கப்போகின்றோம் என தெரியவில்லை. இந்த சேதன உரம் என்னும் திரவ உரத்தினால் கால்களில் ஒருவகை கடி ஏற்படுவதோடு பன்றிகள் இந்த உரத்தின் மணத்திற்கு அதிக அளவில் படையெடுக்கின்றன. இதனால் பன்றிகள் நெல்லை சேதப்படுத்துகின்றது.
நெற்கதிர்கள் 150ற்கு மேற்பட்ட மணிகளை கொண்டு யூரியா விசுறிய நிலையில் காணப்பட்டபோதும் தற்போது 20மணிகளும் புதிர் மணியாகவே காணப்படுகின்றன. எனவே விவசாய அமைச்சரே எமது இந்த அவலத்தை திரும்பி பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என அரசினால் வழங்கிய திரவ உரத்தை ஏந்தி வயலில் நின்றவாறு தெரிவித்தனர்.