நான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப்போவதில்லை. தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் வெளியேறமாட்டேன். எஞ்சிய இரண்டு வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்வேன். அதற்குரிய மக்களாணை எனக்கு உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி இலங்கை முழுவதும் பல மாதங்களாக போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையை மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது குறித்தே இப்போது முழுக் கவனத்தையும் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ப்ளூம்பெர்க் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த விடயங்களைத் தெரிவித்தார். இலங்கையின் வெற்றிக்காக நான் கடந்த காலங்களில் சிறந்த சேவையாற்றியுள்ளேன். பாதுகாப்பு-நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளாராக ஆற்றிய சிறப்பான சேவைகளை நினைவுபடுத்த விரும்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இரசாயன உரங்களை குறுகிய கால அறிவிப்புடன் தடை செய்து, இயற்கை விவசாயத்துக்கு திரும்ப தான் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவை அவர் நியாயப்படுத்தினார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையைக் கட்டுப்படுத்தும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் வெற்றி குறித்தும் கோட்டாபய ராஜபக்ச சந்தேகம் தெரிவித்தார். ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் கொண்டிருந்தால் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. இல்லையேல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துவிட்டு முழுமையான வெஸ்ட்மினிஸ்டர் பாணி பாராளுமன்றத்திற்கு செல்லவேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.
பொருளாதார நெருக்கடி குறித்துக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, நெருக்கடி நிலை முற்றுவதற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்னதாக நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடிச்சென்றிருக்கவேண்டும். அவ்வாறு சென்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றார். தற்போது நான் இந்தியா மற்றும் சீனாவிடம் உதவி கேட்டுள்ளேன். தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களுக்கு கடிதம் எழுதினேன். பின்னர் கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மத்திய கிழக்கு தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன். மேலும் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கான நீண்ட கால ஒப்பந்தங்களுக்கு உதவ சவுதி மற்றும் ஓமானுடன் பேச விரும்புகிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசு ஊழியர்களையோ அல்லது இராணுவத்தையோ குறைக்க முடியாது. எனினும் இனிமேல் ஆட்சேர்ப்பை குறைக்கலாம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.