எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொது மக்கள் மீது படையினரும் பொலிஸாரும் தாக்குதல்கள் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் அது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் எச்சரிக்கை கலந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் மற்றும் பொது மக்களிடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலையடுத்தே இவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பதற்றமான சூழ்நிலைகளை கட்டுப்படுத்த, அதிகப்படியான வலு பயன்படுத்தப்படுமாயின் அது குறித்து விரைவான விசாரணைகளை அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில், எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டு அதிகரிப்ப தால், இயற்கையாகவே பதற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எனினும், இந்த ஆவேசம் இலங்கையின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிகாரிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிகப்படியான வலுவை பயன்படுத்தினால், அது குறித்து விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர்.
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு படையினர் அதிகப்படியான சக்தியை பயன்படுத்தினால் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.